இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த மீனவர்களை எதிர் வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.


 கடந்த புதன் கிழமை மாலை தலைமன்னார் கடற்கரையில் இருந்து சுமார் 09 கிலோ மீற்றர் கடல் மைல் தொலைவில் சுமார் 4 இலுவைப்படகுகளில் 19 இந்திய மீனவர்கள் கடல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அவதானித்த கடற்படையினர் குறித்த மீனவர்களை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

 பின் மேலதிக விசாரணைக்காக கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் குறித்த 19 மீனவர்களிடமும் தலைமன்னார் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே குறித்த மீனவர்களை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

 குறித்த 19 இந்திய மீனவர்களும் வவுனியா சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.அவர்களுடைய 4 இலுவைப்படகுகளும் தலைமன்னார் கடற்படையினர் தடுத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top