'வேகம்' குறும்பட வெளியீட்டு விழாவில் தமிழ் நேசன் அடிகளார்
குறும்படம் எடுப்பது மிகவும் இலகுவான ஒரு விசயம் என்ற எண்ணம் இன்று பலரிடத்தில் காணப்படுகின்றது. ஒரு வீடியோ கமராவும், நடிப்பதற்கு அல்லது படத்தில் முகம் காட்டுவதற்கு சில நண்பர்களும் இருந்துவிட்டால் குறும்படம் எடுத்துவிடலாம் என்ற நினைப்புடன் பெரும்பாலான இளைஞர்கள் இன்று குறும்படத் துறையில் குதிக்கின்றார்கள்.
குறும்படங்களுக்கான அடிப்படை அம்சங்களைக்கூட இழந்துபோய், வெறும்; ஆர்வக் கோளாறுகளால் காட்சிகளை நிரப்பி, குறும்படம் என்ற லேபிளை ஒட்டி வெளியீடு செய்கின்ற நிலை இன்று காணப்படுகின்றது என அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.
மன்னார் நகரசபை மண்டபத்தில் அண்மையில் (24.05.2013) திரு. ஏ. நிசாந்தன் அவர்களின் 'வேகம்;' என்ற குறும்படத் திரைப்பட விழாவிற்கு தலைமைதாங்கி உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் நேசன் அடிகளார் தொடர்ந்து உரையாற்றும்போது கூறியதாவது,
குறும்படத்தின் அடிப்படை என்ன? அதன் உயிர்ப்பான தன்மைகள் எவை? என்பவற்றை அறியாமலே வீடியோக் கமராவுடன் பலர் கிளம்பிவிடுகின்றனர்.
இன்னும் சிலர் தாம் பிரபலமடைவதற்காகவும், வேறுசில இலாபங்களைப் பெறுவதற்காகவும், குறம்படத் தயாரிப்புக்களில் இறங்கிவிடுகின்றனர்.
உண்மையில் குறும்படம்தான் முழுநீளத்திரைப்படம் ஒன்றைவிடவும் படைப்பாளியின் எல்லாத் திறன்களையும், அதிகமாகக் கோரிநிற்கும் ஒரு வடிவம். முழுநீளத் திரைப்படத்தில் 3 மணி நேரத்தில் தான் சொல்ல வந்ததை இயக்குனர் வெளிப்படுத்த கால அவகாசம் கிடைக்கின்றது. ஆனால் குறும்படத்தில் ஆகமிஞ்சிப் போனால் வெறும் 30 நிமிடங்களே வரையறை செய்யப்படுகின்றது.
இந்தக் குறுகிய நேரத்திற்குள் தான் சொல்ல வந்த செய்தியை இயக்குனர் சொல்லியே ஆகவேண்டும்.
குறும்படம் என்பதற்கு விதிக்கப்பட்ட சில வரையறைகள் எதுவும் இல்லாவிட்டாலும், அது தனக்கென எழுதப்படாத சில அம்சங்களைக் கொண்டிருக்கின்றது. 30 நிமிடத்திற்கு மேலாக குறும்படத்தின் நேரத்தைச் நகர்த்திச்செல்லக்கூடாது. தேவையற்ற விபரிப்புக்களைத் தவிர்க்க வேண்டும். பாடல்கள், சண்டைக் காட்சிகள் போன்ற தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத -அம்சங்களைத் தவிர்த்தல் வேண்டும். வெற்றுக்கோசங்களாக பழமொழிகள், கவிதைகள், வசனங்கள் போன்வற்றை வரிவடிவிலோ, அல்லது எழுத்து வடிவிலோ இணைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
விவேக் மோனிஷ் என்னும் இளம் இந்திய குறும்படத் தயாரிப்பாளர் சொல்கிறார், 'விசயம் எவ்வளவு பெரிதானாலும், சில நிமிடங்களில் சொல்லிவிடவேண்டும். குறும்படம் என்பது குறள் மாதிரி, இரண்டு வரியில் அருமையான கருத்தை உள்ளடக்கி;ய திருக்குறளைப்போல, நாம் சொல்லவரும் கருத்தை மூன்று நிமிடங்களில் சொல்வதுதான் குறும்படத்தினுடைய சவால்.'
திரு. நிசாந்தன் அவர்கள் சமூக விழிப்புணர்வு ஊட்டும் பல குறும்படங்களை எடுத்து வருகின்றார். அவருடைய முயற்சி பாராட்டுக்குரியது. வாய்ப்பு வசதிகள் இல்லாமையால் அவருடைய முழுமையான திறமையை அவர் வெளிக்காட்ட முடியாதவராக இருக்கின்றார். இவர் தனது ஆற்றல்களை வெளிக்கொணர வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தால் இவர் நமது சமூகத்திற்கு பயனுடைய இன்னும் பல காத்திரமான படைப்புக்களை வெளிக்கொணர்வார் என நம்பலாம்.
Home
»
mannar news
»
special
»
செய்திகள்
» குறும்படத்தின் அடிப்படை அம்சங்களை அறியாமல் பலர் குறும்படங்களை எடுக்க முனைகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment