இலங்கையில் புகைப்பிடித்தல் வருடா வருடம் சுமார் 15 சதவீதப்படி வீழ்ச்சி அடைந்து வருவதாக மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புபுது சுமணசேகர நேற்றுத் தெரிவித்தார்.


2013ம் ஆண்டின் முதல் மூன்று மாத காலப்பகுதியை 2012ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிட்டுப் பார் க்கும் போதும் புகைப்பிடித்தலில் சுமார் 14 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

புகைப்பிடித்தல், பாவனை தற்போதைய வேகத்தில் வீழ்ச்சி அடைந்து செல்லுமாயின் அது 2020ம் ஆண்டாகும் போது 2 சதவீதமாக வீழ்ச்சி அடைந்து விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலக புகைத்தல் எதிர்ப்புத் தினம் (மே 31ம் திகதி) இன்றாகும். அதனையொட்டி தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் மண்டபத்தில் மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையம் (அடிக்) விசேட செய்தியாளர் மாநாடொன்றை நேற்று நடாத்தியது.

இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச் செய்தியாளர் மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய நிலையத்தின் தலைவர் தேசபந்து ஒல் கொட் குணசேகர “புகைப் பிடித்தல் காரணமாக ஏற்படும் நோய்களால் வருடாவருடம் இலங்கையில் மாத்திரம் 22000 - 25000 பேர் உயிரிழக்கின்றனர். இதேவேளை இந்த நூற்றாண்டில் நூறு கோடி மக்கள் புகைப்பிடித்தல் காரண மாக ஏற்பட்ட நோய்களால் உயிரி ழப்பர் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.

“இவ்வாறான நிலையில் அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார ஸ்தாபன மாநாட்டின் போது தொற்றா நோய்களால் ஏற்படும் மரணங்களை 25 சதவீதத்தாலும் புகைத்தல் காரணமாக ஏற்படும் மரணங்களை 30 சதவீதத்தாலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உலக நாடுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

இச் செய்தியாளர் மாநாட்டில் நிறைவேற்றுப் பணிப்பாளர் புபுது சுமனசேகர மேலும் கூறுகையில், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அறிக்கைப்படி 1994ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையும் புகைப்பிடித்தல் பாவனை வருடா வருடம் சுமார் 15 சதவீதத்தால் குறைந்து வருகின்றது. இதன் காரணத்தினால் புகை பிடிக்கவென புதிய ஆட்களைக் கவர்ந்திழுக்கவென பலவிதமான உத்திகளைப் புகையிலை கம்பனி மேற்கொள்ளுகின்றது. இதனைப் பொது மக்கள் உணர்ந்து அதனைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இலங்கை புகையிலைக் கம்பனி இந்நாட்டுக்குப் பெருந்தொகைப் பணத்தை வரியாகச் செலுத்துவதாகக் கூறுகின்றது. ஆனால் அதனை விட பல மடங்கு பணத்தை அவர்கள் இந்நாட்டிலிருந்து எடுத்து செல்லுகின்றார்கள். அத்தோடு அவர்கள் செலுத்தும் வரியும் சுமார் 50 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு விழிப்பூட்டலே காரணமாகும்.

இதேநேரம் வெல்லவாய நகரில் சிகரட் விற்பனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. வெல்லவாய பிரதேச சபையும், மருத்துவ அதிகாரி அலுவலகமும், நகர கடை உரிமையாளர்களும் இணைந்து இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இது ஏனைய பிரதேசங்களுக்கு நல்ல முன்மாதிரியாகும் என்றார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட உளவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் மகேஷ் ராஜசூரியவும் கலந்து கொண்டார்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top